கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் ஆக்கிரமிப்பு கடைகள்– கட்டிடங்கள் அகற்றம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் இருந்த கடைகள், பழைய கட்டிடங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டன.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையில் இருந்த கடைகள், பழைய கட்டிடங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டன. வருவாய்த்துறை, நகரசபை அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்கோவில்பட்டி நகரில் உள்ள ஓடைகள், நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமல் சாலைகள், தெருக்களில் குளம் போன்று தண்ணீர் தேங்குகிறது. எனவே கோவில்பட்டியில் உள்ள ஓடைகள், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதையடுத்து முதல்கட்டமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஓடையை ஆழப்படுத்தி தண்ணீர் வழிந்தோடச் செய்வதற்கு வருவாய்த்துறை மற்றும் நகரசபை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, நேற்று காலையில் வண்ணார் ஊரணி தெருவில் இருந்து மெயின்ரோடு வரையிலான அந்த ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
அந்த ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த மீன் கடைகள், கோழி கடைகள் உள்ளிட்ட 17 கடைகளும், பழைய கட்டிடங்களும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
தூர்வாரும் பணி தொடரும்தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நகரசபை ஆணையாளர் அச்சையா ஆகியோர் முன்னிலையில் நகரமைப்பு அதிகாரி காஜாமைதீன், கட்டிட ஆய்வாளர்கள் சந்தனசேகர், குமார், வருவாய் ஆய்வாளர் அப்பணராஜ், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் மற்றும் வருவாய்த்துறை, நகரசபை ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தாசில்தார் கூறுகையில், ‘ அடுத்தகட்டமாக செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடையை முழுமையாக ஆழப்படுத்தும் பணி நடைபெறும். தொடர்ந்து நகரிலுள்ள அனைத்து அனைத்து ஓடைகள், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறும், என்றார்.