ராமநாதபுரம்–ராமேசுவரம் தனுஷ்கோடி வரை ரூ.1200 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிக்காக மண் ஆய்வு பணி

1200 கோடி மதிப்பில் ராமநாதபுரம்–ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலும் அமையவுள்ள நான்கு வழிச்சாலை பணிக்காக முதல் கட்டமாக மண் ஆய்வு பணிகள் நடைபெற்றன.

Update: 2017-11-07 22:15 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்கள் உளளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். ராமேசுவரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ராமநாதபுரம் வந்து தான் வர வேண்டும். அதுபோல ராமநாதபுரம–ராமேசுவரம் இடையிலான இந்த 55 கிலோ மீட்டர் சாலையானது பல ஆண்டுகளாக இரு வழிச் சாலையாகவே இருந்து வருவதாலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும் அடிக்கடி விபத்துகள் நடந்து, போக்குவரத்து நெருக்கடி எற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே நான்குவழிச்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதியும் வழங்கிவிட்டது. மேலும் இந்த சாலை ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்க சுமார் ரூ.1200 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் முதல் கட்டமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியை சேர்ந்த குழுவினர் ராமநாதபுரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் அரை கிலோ மீட்டர் தூர இடை வெளியில் சாலை ஓரத்தில் 5 அடி ஆழம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். மேலும் டைனமிக் எந்திரம் மூலம் சாலையின் மேலிருந்து கீழ் வரை உள்ள உயரத்தை பதிவு செய்தும், தோண்டப்பட்ட இடத்தில் இருந்து மண்ணையும் ஆய்வுக்காக சேகரித்தனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 ராமநாதபுரம்–ராமேசுவரம் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. அதற்கான முதல் கட்ட பணியாக சாலையின் உயரம், அகலம் ஆகியவற்றை பதிவு செய்து, ஆய்வுக்காக மண் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மண் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ராமநாதபுரம்–தனுஷ்கோடி வரையிலும் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப் பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.967 கோடி நிதியில் நான்கு வழிச் சாலைபணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்