திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

திருவாடானை ஊராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-11-07 22:15 GMT

தொண்டி,

திருவாடானையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 12–வது தாலுகா மாநாடு நடைபெற்றது. கட்சி கொடியை தாலுகா குழு உறுப்பினர் நாகநாதன் ஏற்றி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமு வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கையை வாசித்தார். அஞ்சலி தீர்மானங்களை மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம் வாசித்தார். கூட்டத்தில் கட்சியின் புதிய தாலுகா செயலாளராக சேதுராமு, தாலுகா குழு உறுப்பினர்களாக நாகநாதன், குணசேகரன், பால்சாமி, நாகூர் பிச்சை, மீனாள் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் திருவாடானை தாலுகாவில் கடந்த 2016–17ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை முழுமையாகவும், முறையாகவும் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியில் துறைமுகம் அமைக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி–மதுரை இடையே இருப்பு பாதை அமைக்க வேண்டும்.

திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள அனைத்து கண்மாய், ஊருணிகளை தூர்வார தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த தாலுகாவில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். பேரூராட்சி பகுதியிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில் பேரணியும், மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்