ரூ.20 ஆயிரம் கடனுக்கு ரூ.54 ஆயிரம் கந்து வட்டி வசூலித்த கொடுமை தம்பதியினர் கண்ணீர் மனு

ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியதற்கு ரூ.54 ஆயிரம் கந்து வட்டி வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

Update: 2017-11-06 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது திருச்சியை அடுத்த உய்ய கொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி- ஹேமலதா தம்பதியினர் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் மனு வாங்கி கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பஷீரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நாங்கள் குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தோம். இந்த தொகைக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 18 மாதங்களுக்கு ரூ.54 ஆயிரம் வாங்கி கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து எங்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்தார்கள். நாங்கள் எங்களிடம் வேறு பணம் இல்லை. எங்களால் இனி வட்டி கட்ட முடியாது. அசல் பணத்தை தந்து விடுகிறோம் என கூறி முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதனை அசல் தொகையில் சேர்க்காமல் 2 மாத வட்டியாக கழித்துக்கொண்டதாக கூறினார்கள். அவர்களது காலில் விழுந்து கதறியும் கேட்காமல் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்