ரூ.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சாந்தப்பிள்ளை கேட் ரெயில்வே மேம்பாலத்தில் விரிசல் பொதுமக்கள் அச்சம்

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரூ.52 கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-11-06 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் ரூ.52 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை நபார்டு திட்டங்கள் மூலம் பாலம் 18 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 869 மீட்டர் நீளத்தில் 12 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தன.

பாலத்தின் 2 புறமும் 7 மீட்டர் நீளம் அணுகுசாலையும் அமைக்கப்பட்டன. இதற்காக இந்த பாலத்திற்கு அடியில் செல்லும் கல்லணைக்கால்வாயில் 2 சிறுபாலமும், பாலத்திற்காக 22 தூண்களும் அமைக்கப்பட்டன. அதன்படி பாலம் கட்டப்பட்டு சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பாலத்தில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பாலம் வண்டிக்காரத்தெருவில் இருந்து ஏறும் இடத்தில் சில மீட்டர் தொலைவில் பாலத்தில் போடப்பட்டு இருந்த தார்சாலையில் சில அடிதூரம் விரிசல் காணப்பட்டது. இதே போல் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றிலும் விரிசல் காணப்பட்டது.

பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் முன்னரே விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன், உதவி பொறியாளர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்