புதுவையில் மழையால் பாதித்த பகுதிகளை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்

புதுவையில் மழையால் பாதித்த பகுதிகளில் கவர்னர் கிரண்பெடி நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2017-11-06 23:00 GMT

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற கவர்னர் கிரண்பெடி நேற்று காலை புதுச்சேரி திரும்பினார். பின்னர் அவர் புதுவையில் மழையால் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதற்காக புதுவை கவர்னர் மாளிகையில் இருந்த தனது காரில் புறப்பட்ட அவர் பூமியான்பேட், பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், 45 அடி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவருடன் பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டதை பார்த்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களிடம், மழை தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, ‘‘புதுவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்