குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் அதிகமான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி இருக்கிறது. கடந்த 6 தினங்களாக மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியிருப்பதால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றை அகற்றக்கோரியும் மாநகராட்சி மற்றும் மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் இதற்கு செவிமடுக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.