பஸ் நிலையத்தில் விபத்து: 2 பஸ்களுக்கிடையே சிக்கி செருப்புக்கடை அதிபர் பலியான பரிதாபம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் 2 பஸ்களுக்கிடையே சிக்கி செருப்புக்கடை அதிபர் பலியானார்.

Update: 2017-11-06 22:15 GMT

நாகர்கோவில்,

அழகியமண்டபம் அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் (வயது 65). செருப்புக்கடை அதிபர். நாகர்கோவில் இடலாக்குடியில் வசிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக இவர் நேற்று நாகர்கோவிலுக்கு வந்தார். அங்கு மகளை பார்த்து விட்டு பகல் 12.30 மணிக்கு, நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்த அவர், ஊர் திரும்பி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

இந்தநிலையில் அரசு பஸ் ஒன்று வேகமாக பஸ் நிலையத்துக்குள் வந்தது. பஸ் நிலையத்தில் மற்றொரு பஸ்சை ஒட்டியபடி முகமது ஹசன் நின்றார். இந்தநிலையில் வேகமாக வந்த அரசு பஸ், முகமது ஹசன் மீது மோதியபடி சென்றது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களுக்கும் இடையே அவர் சிக்கி கொண்டார். இதனால் அவரது உடல் நசுங்கியது.

பஸ்களுக்கிடையே சிக்கியதால் அலறி துடித்த முகமது ஹசனை, மற்ற பயணிகள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே முகமது ஹசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி முகமது சுலைமான் என்பவர், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பு பிரகாஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சசீதரன் ஆகியோர் வாத்தியார்விளையை சேர்ந்த பஸ் டிரைவர் ரவீந்திரன் (45) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்களுக்கிடையே சிக்கி செருப்புக்கடை அதிபர் பலியான சம்பவம் அங்கு நின்ற மற்ற பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்