பலத்த மழையால் ஊத்துக்கோட்டை தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது
பலத்த மழை காரணமாக ஊத்துக்கோட்டை தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரிநீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இவ்வாறு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு சார்பில், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சிற்றபாக்கம் பகுதியில் 1983–ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. 8 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீர், தேவைப்படும் போது கிருஷ்ணாநதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஆரணி ஆற்றில் வரும் உபரிநீர் மற்றும் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
மேலும் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணாநதி கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தடுப்பணையில் இருந்து நிரம்பி வழியும் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தோடுகிறது.
தடுப்பணையில் இருந்து நிரம்பி வழிந்தோடும் தண்ணீரில் சிறுவர்–சிறுமிகள், பெண்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.