ஆழ்குழாய், கிணறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதாக கூறி கழிவு நீர் பாட்டில்களுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகள்

பல்லடம் பகுதியில் ஆழ்குழாய் மற்றும் கிணறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதாக கூறி கழிவுநீர் பாட்டில்களுடன் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.

Update: 2017-11-06 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

திருப்பூர் பல்லடம் கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் பகுதிகளை சுற்றி 15–க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகிறது. சாயக்கழிவுநீரை சுத்தம் செய்யக்கூடிய பொது சுத்திகரிப்பு மையமும் கடந்த 6 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த நிறுவனங்களில் சில நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை நிலங்களில் திறந்து விட வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீரை வேளாண்மை துறை சார்பில் பரிசோதனை செய்த போது அந்த நீர் விவசாயம் செய்ய தகுதியற்றது என தெரியவந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து அந்த நிறுவனங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். மேலும் மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி காங்கேயம், ஏக்கத்தான்வகை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட கருப்பன்சாமி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு டாஸ்மாக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எங்கள் ஊரில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் மதுபானக்கடை உள்ளதால், பெண்களும், குழந்தைகளும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில் “அவினாசிக்குட்பட்ட கருவலூர், தெக்கலூர், பெருமாநல்லூர் பகுதிகளில் உள்ள தனியார் உணவு விடுதிகளில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது. எனவே போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்