கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-06 23:15 GMT

மதுரை,

நெல்லை சிந்துபூந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த மாதம் 23–ந்தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக கந்துவட்டி பிரச்சினை குறித்து இசக்கிமுத்து, தென்காசி அச்சன்புதூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் உரிய நடவடிக்கை கோரி 4 முறை மனு அளித்துள்ளார். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து, தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முழு காரணம் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீசார் மற்றும் நிர்வாகத்துறையை சேர்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தான்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தமிழக தலைமை செயலாளர், தென்மண்டல ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே பலியான சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் நெல்லை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து இசக்கிமுத்துவின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர், தென்மண்டல ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்