கன மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2017-11-05 23:00 GMT
நெல்லை,

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பை, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மாதேவி, கடையம், கல்லிடைக்குறிச்சி, ஆய்குடி, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழையும், பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைப்பகுதியில் பலத்த மழையும் நெல்லை, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைப்பகுதியில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 475 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 444.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 77.50 அடியில் இருந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 87.50 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலையிலும் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

சேர்வலாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் 90.94 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 102.72 அடியாக உயர்ந்தது.

மணிமுத்தாறு அணை பகுதியில் 124.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணைக்கு 5 ஆயிரத்து 386 கன அடி தண்ணீர் வந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் 56.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 66.20 அடியாக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதியான களக்காடு, வள்ளியூர், நாங்குநேரி, கொடுமுடியாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் 49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 52.50 அடியாக உயர்ந்து அணையின் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வந்து கொண்டிருந்த 628 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 67 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 61 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 61.35 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 100.23 அடியாகவும், குண்டாறு அணை முழு கொள்ளளவான 36.10 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 21.65 அடியாகவும் இருந்தது.

இதேபோல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் நேற்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மணிமுத்தாறு அருவியே தெரியாத அளவுக்கு அருவிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவியின் முன்பு இருந்த தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-142, மணிமுத்தாறு-124.2, கொடுமுடியாறு-130, நாங்குநேரி-90, சேர்வலாறு-84, அம்பை-68, சேரன்மாதேவி-59.2, குண்டாறு-52, நம்பியாறு-52, ராதாபுரம்-49, செங்கோட்டை-47, ஆய்குடி-46.2, தென்காசி-35.4, ராமநதி-25, கருப்பாநதி-18, அடவிநயினார்-15, பாளையங்கோட்டை-10.2, கடனாநதி-10, நெல்லை-7.2, சிவகிரி-2, சங்கரன்கோவில்-1. 

மேலும் செய்திகள்