கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளால் தொடரும் விபத்துகள்
கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகி விட்டன.
கம்பம்,
கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு பெண் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 200–க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் அழைத்து செல்லப்படுகின்றனர். காலையில் செல்லும் இவர்கள் மாலையில், அதே ஜீப்புகளில் வீடு திரும்புகின்றனர்.
இந்த ஜீப்புகளில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றி செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கை, கால்களை வெளியே தொங்கவிட்டபடி ஆபத்தான பயணத்தை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் ஜீப்புகள் அசுர வேகத்தில் செல்கின்றன.
ஜீப் டிரைவர்கள் போட்டி போட்டு கொண்டு, கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். கடந்த காலத்தில் நடந்த விபத்துக்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். கை, கால்களை சில தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர். விபத்து நடந்தால் மட்டுமே போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
ஜீப்புகளை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால் இந்த கட்டுப்பாடு சில நாட்களிலேயே காற்றில் பறந்து விடுகிறது.
இது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் ஜீப்புகளில் 12 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஜீப்புகளுக்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். டிரைவர்கள் காக்கி சீருடை அணிந்திருக்க வேண்டும். மலைப்பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறை உள்ளது.
ஆனால் இதனை பெரும்பாலானோர் கடைபிடிப்பது கிடையாது. ஒரு ஜீப்பில் 20 பேர் வரை ஏற்றுகின்றனர். அசுர வேகத்தில் ஜீப்புகளில் செல்கின்றனர். ஜீப்புகளை முறையாக பராமரிக்காததால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது பெண் தொழிலாளர்களை வைத்து ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதன்காரணமாக நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.