செய்தி தரும் சேதி - எல்லையற்ற மல்லை
வரலாறு எண்ணற்ற சுவடுகளைப் பதித்துக்கொண்டே செல்கிறது. மனிதர்கள் நட்ட சொற்கள் பாதி; இயற்கை நட்ட கற்கள் மீதி.

வரலாறு என்பது பாடம் அல்ல, படிப்பினை. சரித்திரம் என்பது தகவல்கள் அல்ல, தகவுகள். போர்களும், வெற்றிகளும் மட்டுமே கல்வெட்டுகள் அல்ல, நன்மைகளும், நற்செயல்களும் வரலாறே. உருண்ட தலைகள் மட்டுமல்ல, உருவான கலைகளும் வரலாறே. சாய்ந்த சாம்ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல, ஓங்கிய கோபுரங்களும்தான். அழிந்த அரண்மனைகள் மட்டுமல்ல, பரவிய பண்பாடும்தான். சிதைந்த வாழ்விடங்கள் மட்டுமல்ல, செதுக்கிய சிற்பங் களும் சேர்த்தே சரித்திரத்தைக் கட்டமைக்கின்றன.
வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடும்போது நாமும் பழங் காலத்திற்குப் பயணப்படுகிறோம். பார்வையிடுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பயிலவும் செய்யும்போதுதான் நினைவுகளில் அவை நீடித்து நிற்கின்றன. அவை பல நுட்பமான செய்திகளை நமக்குக் கைப்பிடித்துக் கற்றுத் தருகின்றன. அசோகரின் பாதுகாக்கப்பட்ட பாறை சாசனங்கள் அவருடைய அன்பையும், கருணையையும் உணர்த்துகின்றன.
வரலாற்றுச் சின்னங்களை வழிகாட்டியுடன் பார்த்தால் புதிய புதிய தகவல்கள் புலப்படும். ஒரே நாளில் முடிந்துவிடுகிற சுற்றுலா மூன்று நாட்கள் நீடிக்கிற அளவு அரிய செய்திகள் அங்கே குவிந்திருப்பதை சரியான வழிகாட்டி கிடைத்தால் அறியலாம். நேர்மையான வழிகாட்டி மெழுகுவர்த்திபோல, மறைந்திருக்கும் பொக்கிஷங்களை நம் புலன்களுக்குப் புலப்படுத்துவார்.
பெரிய கோவிலை வழிகாட்டியுடன் பார்த்தால் அதிலிருக்கும் ஒவ்வொரு சிற்பத்தின் சிறப்பும் நமக்குத் தெரியும், ‘ராஜராஜன் எந்த வாயில் வழியாக தரிசனத்திற்கு வருவார்’ என்பது புரியும். அங்கிருக்கும் கல்வெட்டுகள் ஆண்டு முழுவதும் அணையா தீபத்திற்கு ‘சாவா மூவா ஆடு, மாடுகளை’ தானம் தந்த விவரத்தைப் பதிவு செய்ததை அறியலாம். தாராசுரத்திலிருக்கும் இசைத் துண்களின் இனிமையை உணர்ந்து மெய்சிலிர்க்கலாம். கோல்கொண்டா கோட்டையில் கீழே தீக்குச்சியைக் கிழித்தால் மேலே சத்தம் கேட்பதையறிந்து பிரமிக்கலாம். ஆக்ரா கோட்டையில் ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட அறையிலிருந்து தாஜ்மஹாலைப் பார்த்த மன்னனின் கடைசி ஆசையை அசைபோடலாம். பதேபூர் சிக்ரியில் பளிங்கு சன்னல்களின் உள்ளிருந்து பார்த்தால் வெளியே நடப்பது தெரியும், வெளியே நின்று பார்த்தால் அச்சாளரங்கள் வழியாக உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியாது.
வரலாற்றுத்தலங்களுக்கு மட்டுமல்ல, வழிபாட்டுத்தலங்களுக் கும் நல்ல வழிகாட்டி அவசியம். சில மகத்தான ஆலயங்களில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படும். எந்த வழியாக வெளியே செல்வது எனத் தெரியாத அளவிற்கு பிரமாண்டமான கோவில்கள் நம்மிடையே உண்டு.
வழிகாட்டுபவர் ஆழ்ந்த அறிவுடன் இருப்பது அவசியம். தஞ்சைப் பெரிய கோவிலுக்கு அழைத்துச் செல்பவர் ஓரளவிற்குச் சோழ வரலாற்றைப் படித் திருக்க வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிகாட்டியாக இருந்தால் வரலாறு, புனைவியல், இலக்கியம் என்று அது பற்றிய தகவல்களை விரல் நுனியிலும், வியப்பை விழி நுனியிலும் வைத்திருப்பது அவசியம். நீலகிரி போன்ற மலைவாழ் தலங்களுக்கும் மலைக்க வைக்கும் வரலாறு உண்டு.
வழிகாட்டிகள் வாழ்விற்கும் தேவை, வரலாற்றுக்கும் தேவை. சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை நம்மூரில் அதிக நாட்கள் தங்க வைக்கும் தங்க மந்திரத்தைத் தெரிந்து வைத்திருப்பார்கள். வாழ்வின் வழிகாட்டிகள் உலகில் நம்மை அதிக உயிர்ப்புடன் தங்க வைக்கும் வைர வழிகளைச் சுட்டிக் காட்டுவார்கள். மக்கள் வழிகாட்டிக்குச் செலவு செய்வதில் கஞ்சத்தனம் பிடித்து அனுபவத்தையே இழந்துவிடுகிறார்கள்.
வரலாற்று உணர்வு உள்ளவர்களே வழிகாட்டியாக முடியும். அகண்ட வாசிப்பு, அன்புத் தோற்றம், குமிழ் சிரிப்பு, சரளமான மொழி, தகுந்த உடல்மொழி, கனிவான அணுகுமுறை, கரிசனமான செயல்பாடு ஆகியவையே நல்ல வழிகாட்டியின் நயத்தகு அம்சங்கள்.
வழிகாட்டி பயணிகளை அடைகாப்பதுபோல அக்கறை காட்ட வேண்டும். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாதவாறு பொறுப்புணர்வு காட்ட வேண்டும்.
சில மாநிலங்களில் தொடர்வண்டி நிலையங்களிலேயே பயணிகளை ஏமாற்றும் கும்பல்கள் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிகளின் பட்டியல் இப்போதெல்லாம் இணையத்திலேயே கிடைக்கிறது. முன்கூட்டியே அவர்களிடம் பெயரைப் பதிவுசெய்துவிட்டு வருகிற வெளிநாட்டுப் பயணிகள் உண்டு.
எல்லாப் பயணிகளும் முன்தயாரிப்போடு வருவதில்லை. அவர்கள் இறங்கிய பிறகு என்ன செய்யலாம் என யோசிப்பார்கள். வழிகாட்டிகள் அவர்கள் பணப்பைக்கேற்ற பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் ஆர்வத்திற்கும், தேவைக்குமேற்ப எவற்றைப் பார்க்கலாம் எனப் பட்டியலிடலாம். எங்கு சாப்பிடுவது என அவர்கள் உணவுப் பழக்கத்திற்கேற்ப தகவல் தரலாம். விரும்பும் பொருட்களை ஏமாறாதவாறு வாங்க உதவி செய்யலாம். இப்படி அனைத்தையும் நுணுக்கமாகச் செய்யும் வழிகாட்டிகளைத் திரும்பிச் சென்றதும் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.
திரும்பும்போது கண்ணீர் மல்கக் கையசைக்கும் பயணிகளையும், கனத்த இதயத்துடன் விடைபெறும் வழிகாட்டிகளையும் நான் பார்த்திருக்கிறேன். பேசிய தொகைக்கு மேல் ஒற்றை ரூபாயைக்கூட ஒப்புக்கொள்ளாத வழிகாட்டிகளை நான் சந்தித்திருக் கிறேன்.
நம் வழிகாட்டுதலே நம் மாநிலம் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மனதில் ஒற்றி வைக்கிறது என்பதை வழிகாட்டிகள் உணர வேண்டும்.
உள்ளூரிலிருப்பவர்கள் அறியாத பல தகவல்கள் ஒவ்வோர் இடத்திலும் இருக்கின்றன. செயற்கை வெளிச்சங்களில் விழிகளையிழந்து வழிகளைத் தவறவிடுபவர் நாம். அருகிலிருப்பதாலேயே மாமல்ல புரம் என்கிற மகத்தான கலைநகரத்தின் மகத்துவம் நமக்குத் தெரிவ தில்லை. பல்லவர்களின் கடற்படைத் துறைமுகமாகவும், வர்த்தகத் தலைநகராகவும், அலைகள் காலடித்தடங்கள் பதித்த வரலாற்றுப் புகழ்கொண்ட இடம் அது.
நான் சுற்றுலாத் துறையிலிருந்தபோது சுவாமிநாதன் என்பவர் வந்து சந்தித்தார். மாமல்லபுரம் குறித்து அவர் எழுதிய புத்தகம் ஒன்றைத் தந்தார். அவருடைய மதிநுட்பத்தைப் பரப்பும் வகை யில் மல்லையிலேயே பணிப்பட்டறையொன்றையும் நடத்தினோம்.
மாமல்லபுரத்தை அவர் ‘இந்தியக் கட்டிடக்கலையின் அருங்காட்சியகம்’ (Museum of Indian Arcitecture) என்று குறிப்பிட்டார். ஒற்றைக்கல் சிற்பம் (monolithic sculpture), திறந்தவெளிச் சிற்பம் (basrelief), கற்கோவில் (rockcut temples), குடைவரைச் சிற்பம் (cave temples) என்ற அனைத்து வகையான கலைப்படைப்புகளும் ஓரிடத்திலிருப்பது மாமல்லபுரத்தில்தான்.
நம் மக்களுக்கு மாமல்லபுர தரிசனம் மதிய உணவு நேரத்துடன் முடிந்துவிடுகிறது. அவசர அவசரமாக, அரைகுறையாய்ப் பார்த்து ‘சுயமி’ (செல்பி) எடுத்தவுடன் சுற்றுலாவை முடித்துக்கொள்பவர்கள் நாம்.
அந்தச் சிற்பங்களை வடித்தவர்களுக்குக் குறைந்தபட்ச மரியாதையைக்கூட நாம் தருவதில்லை. அவற்றில் கரித்துண்டால் கிறுக்கிக் கறை ஏற்படுத்தியவர்களும் உண்டு. அப்படிப்பட்ட செயற்கைச் சிதைவுகளைத் தடுக்க ‘சிற்பக்கலையைச் சிதைக்கலாமா, அற்பச் செயலால் அழிக்கலாமா’ என்ற தலைப்பில் முகாம்களையெல்லாம் நாங்கள் நடத்தினோம்.
மாமல்லபுரம் என்பது ஓரிரவில் உருவான இடமல்ல. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தில் இவை சிறிது சிறிதாக வடிவாக்கம் பெற்று வனப்புடன் நின்று வசீகரம் காட்டுகின்றன. கி.பி. 630 முதல் 728 வரையிலான காலகட்டத்தில் பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டவை இங்கிருக்கும் சிற்பங்கள்.
செல்கிற இடங்களையும், வெல்கிற இடங்களையும் பார்க்கிற மன்னர்களுக்கு, அங்கிருப்பது போன்ற கலைவடிவங்களை அவர்கள் ஊரிலும் அமைக்க வேண்டும் என்ற அவா ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஆசையில் மன்னர் மகேந்திரவர்மன் காஞ்சியினருகிலிருக்கும் மாமண்டூரில் குடைவரைக்கோவிலை வடிக்கத் தொடங்கினார்.
பலவீனமான பாறை, முடியும் முன்னரே விரிசல் கண்டது. கல் மனம் படைத்த அந்தப் பாறை கலை முயற்சிக்குக் கைகொடுக்கவில்லை. அருகருகே அமைத்து தளரா முயற்சியுடன் வெற்றி கண்ட அவர், ஆட்சிக்குட்பட்ட இடங்களிலெல்லாம் குடைவரைக் கோவில்கள் அமைத்தார். அவர் மகன் நரசிம்மவர்மன் அப்பணியைத் தொடரத் தேர்ந்தெடுத்த இடமே மாமல்லபுரம். அங்கு வரிசையாக நரசிம்மவர்மன், அவர் பேரன் பரமேஸ்வரன், பேரனின் மகன் ராஜசிம்மன் ஆகியோர் கட்டியும், செதுக்கியும் கற்களினூடே காவியம் படைத்தனர்.
வராக மண்டபம், ராமானுஜ மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், கிருஷ்ண மண்டபம், திருமூர்த்தி மண்டபம், அர்ஜுனன் தபசு என்றும் பகீரதன் தபசு என்றும் அழைக்கப்படும் திறந்த வெளிச் சிற்பங்கள், கணபதி ரதம், புலிக்குகை, ஐந்து ரதம், கடற் கரைக்கோவில் என அனைத்தையும் உன்னிப்பாக ரசித்துப் பார்க்க ஒரு வாரம் தேவைப்படும்.
எனக்கு எத்தனை முறை அவற்றைப் பார்த்தாலும் அவை அலுப்ப தில்லை; சலிப்பதில்லை. அண்மையில் ‘மாமல்லபுரத்திற்கு வழிகாட்டிப் பயிற்சி முகாம்’ (Docent Training Programme for Mama llapuram) என்ற பெயரில் அந்த நகரில் இருக்கும் தொல்லியல் சின்னங்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது. தொன்மையை நேசித்துப் போற்றும் ஆர்வம் கொண்ட ‘தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை’ (Tamil Heritage Trust) இதை முன்னின்று நடத்தியிருக்கிறது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் பலர் இப்பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். மூன்று நாட்கள் பயிற்சி. சுற்றுலாப் பயணிகளுக்கு பல நுட்பங்களை எடுத்துச் சொல்லும் தன்னார்வலர்களாக அவர்கள் செயல்படுவார்கள்.
“மால்லபுரம் - கற்களில் முற்றுப் பெறாத கவிதை” என்ற புத்தகத்தை எழுதிய சுவாமிநாதன் இந்த அறக்கட்டளையின் இணை நிறுவனர்.
வெறுமனே மாமல்லபுரம் சென்று பார்த்தால் மேம்போக்காக அவற்றின் அழகை மட்டுமே பார்க்கலாம். முழுமையான விவரங்கள் தெரிந்த வழிகாட்டியிருந்தால் அணுவணுவாக அவற்றை ரசிக்க முடியும். நாமே அந்தச் சிற்பங்களாக முடியும், சிற்பியாகச் சிலிர்க்கவும் முடியும். உளியாக நடனமாடவும் முடியும்.
முன்கூட்டியே அவற்றைப்பற்றிய குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டுச் சென்றால் நம் கண்முன்னே விரிவது காட்சியல்ல, சரித்திரம் என்கிற சங்கதி அவர்களுக்குத் தெரியும் என்பதே இச்செய்தி தரும் சேதி.
(செய்தி தொடரும்)