சட்டசபை தேர்தலையொட்டி சுரங்க முறைகேடு பிரச்சினையை சித்தராமையா கையில் எடுத்துள்ளார்

சட்டசபை தேர்தலையொட்டி சுரங்க முறைகேடு பிரச்சினையை சித்தராமையா கையில் எடுத்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-05 00:06 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பல்லாரியில் சுரங்க முறைகேட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டார். ஆனால் சுரங்க முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், சுரங்க முறைகேடு குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் மூலம் மறுவிசாரணை நடத்த மாநில அரசு ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவரான ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதாவினர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதால், அதனை திசை திருப்பவே சுரங்க முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த சித்தராமையா முன்வந்துள்ளார். அதுவும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு விசாரணை குழு போலீசார் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க சித்தராமையா நினைக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் சுரங்க முறைகேடு பிரச்சினையை சித்தராமையா கையில் எடுத்துள்ளார். சுரங்க முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். பழைய வழக்குகளை தூசி தட்டி எதிர்க்கட்சி தலைவர்களை அடக்க நினைக்கும் சித்தராமையாவின் எண்ணம் பலிக்காது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

மேலும் செய்திகள்