நாகர்கோவிலில், காம்பவுண்டு சுவர் இடிந்ததில் சமையலறை கூரை விழுந்து பெண் பரிதாப சாவு

நாகர்கோவிலில் காம்பவுண்டு சுவர் இடிந்து சமையல் அறை கூரை விழுந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-04 23:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஈத்தாமொழி ரோட்டைச் சேர்ந்தவர் மைக்கேல்ராய் (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஜான்சி மேரி (48).

இவர்களது வீட்டுக்கு முன்புறம் காம்பவுண்டு சுவரையொட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் ஆன சமையல் அறை இருந்தது. நேற்று காலை சுமார் 7 மணி அளவில் ஜான்சி மேரி அங்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காம்பவுண்டு சுவர் இடிந்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய சமையலறையும் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் ஜான்சி மேரி சிக்கிக்கொண்டார். இதில் அவருடைய தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

இதற்கிடையே சமையலறை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய ஜான்சி மேரியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பு பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து ஜான்சி மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மைக்கேல்ராய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் காம்பவுண்டு சுவர் நனைந்ததில் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலியான ஜான்சிமேரிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்