காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை கரூர் வந்தது நெரூரில் துறவிகள் சிறப்பு பூஜை

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை கரூர் வந்தது. நெரூரில் துறவிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

Update: 2017-11-04 22:30 GMT
கரூர்,

காவிரி ஆற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 7-வது ஆண்டாக காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந் தேதி கர்நாடக மாநிலம் குடகு மலை தலைக்காவிரியில் இருந்து புறப்பட்டது. ராமானந்தா சுவாமிகள் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் ரதம் மற்றும் 2 கார்களில் புறப்பட்டனர். இவர்கள் காவிரி பாயும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த ரதம் நேற்று முன்தினம் இரவு கரூர் வந்தது. தொடர்ந்து கரூர் பசுபதிபாளையத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் ரதக்குழுவினர் சிறப்பு பூஜை நடத்தினர். இதில் காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் துறவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பூம்புகாரில் நிறைவு

தொடர்ந்து ரதம் நெரூர் புறப்பட்டு சென்றது. நெரூர் காவிரி ஆற்றில் மாலையில் தீப ஆரத்தி எடுத்து துறவிகள் சிறப்பு பூஜை நடத்தினர். காவிரி ஆற்றை தூய்மையாக வைத்து கொள்வது, மாசுபடாமல் பாதுகாத்து கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர். வருகிற 13-ந் தேதி பூம்புகாரில் விழிப்புணர்வு ரத யாத்திரை நிறைவடைகிறது. அங்கு சிறப்பு யாகமும், காவிரி புனித நீர் கடலிலும் விஜர்சனம் செய்யப்படுவதாக விழிப்புணர்வு ரதக்குழு சுவாமிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்