கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது.

Update: 2017-11-04 21:45 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. கடந்த 17.8.2017 அன்று மர்ம நபர்கள் அந்த கொடிக்கம்பத்தை வெட்டி சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டார்கள். இதை கண்டித்து மறுநாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன்பின்னர் அதே இடத்தில் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது. கடந்த மாதம் 29–ந் தேதி மீண்டும் மர்ம நபர்கள் அந்த கொடிக்கம்பத்தை வெட்டி, அருகில் இருந்த பள்ளிக்கட்டிடத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

இந்தநிலையில் கொடிக்கம்பத்தை வெட்டியவர்களை கைது செய்யவேண்டும் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட மேலிட பொறுப்பாளர் சிவசெல்லபாண்டியன் தலைமையில் நேற்று 10 பேர் முற்றுகையிட்டார்கள். கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். அதன்பின்னர் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்துவிடுவோம், கால அவகாசம் தாருங்கள் என்று போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.

மேலும் செய்திகள்