கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.

Update: 2017-11-04 22:30 GMT

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் புதுவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் தேவையின்றி தலையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டு போட்டி அரசாங்கம் நடத்துகிறார். அவர் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை. இதனால் மக்கள் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகிறார்கள். புதுவையில் தீபாவளி பண்டிகைக்கு இலவச சர்க்கரை வழங்கப்படவில்லை. இலவச அரிசியும் சரிவர வழங்கவில்லை.

இதனால் ரே‌ஷன்கடைகளை மூடும் நிலை உள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கவர்னர் கிரண்பெடி மக்களைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக வாங்கப்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தனியாருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி பி.ஆர்.டி.சி.யை இழுத்து மூடும் செயலாக உள்ளது. புதுவையில் வேலைவாய்ப்பினை பெருக்கவோ, மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22–வது மாநில மாநாடு வருகிற 11, 12–ந்தேதிகளில் பாகூரில் நடக்கிறது. அப்போது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடுவோம்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்