டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு அபராதம்
டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் ராமகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் உதயகுமார் மற்றும் பணியாளர்கள் நேற்று விக்கிரவாண்டி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் ஆய்வு செய்தபோது அங்குள்ள வளாகத்தில் வைத்திருந்த பழைய இரும்பு மற்றும் பெட்ரோலிய உதிரிபாகங்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த பெட்ரோல் பங்கிற்கு அதிகாரிகள் ரூ.10 ஆயிரத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டனர். இதற்கான உத்தரவு நகல் ஊராட்சி செயலாளர் அலமேலு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. மேலும் உடனடியாக தேவையற்ற பொருட்களை அகற்றும்படியும், மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.