சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோவையில் அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பு நாளை(திங்கட்கிழமை) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-11-04 22:45 GMT

கோவை,

கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன் தலைமை தாங்கினார். மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.எம்.சாமி, குமரேசன், சாந்தி, டி.பி.சுப்பிரமணியம், கதிர்வேல்சாமி, ஜஹாங்கீர், உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ரே‌ஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலையை ரூ.13.50 லிருந்து ரூ.25 ஆக தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது. எனவே சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து வருகிற 8–ந் தேதி நாடு தழுவிய கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்று கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொள்வது.

கோவை மாநகரம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் நகரமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் தெரு விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கோவையில் உள்ள நீர் வழி தடங்களான நொய்யல் ஆறு, சங்கனூர் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. அதை உடனடியாக தூர்வாரி நீர் வழிதடங்களை சரி செய்ய வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்