இரவில் வெகு நேரம் கண் விழிக்கிறீர்களா?
தற்போது இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவரா? அப்படியானால் இந்தச் செய்தியை அவசியம் வாசியுங்கள்...
இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது ஆபத்தானது என்கிறது மருத்துவ உலகம். இரவில் மட்டுமே சுரக்கும் ‘மெலடோனின்’ என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இரவு வேளையில் நீண்ட நேரம் தூக்கம் வரவில்லையா? உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா? இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியில் ஆழ்ந்திருப்பவரா? நண்பர்களோடு சேர்ந்து தினமும் பார்ட்டி, அரட்டை என்று நேரத்தைக் கழிப்பவரா? இவையெல்லாம் நம் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துபவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவற்றால், மெலடோனின் சுரப்பு பாதிக்கப்படும். மூளையில் இருக்கும் பீனியல் சுரப்பி சுரக்கும் இந்த மெலடோனின் சுரக்காமல்போனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். அது மட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து எல்லா நோய்களையும் உடல் வரவேற்கத் தொடங்கிவிடும் என்கிறார்கள்.
மேலும், இரவில் கண் விழிப்பதால் ஓய்வுகொள்ள வேண்டிய கல்லீரலும் பாதிப்பு அடைகிறது. கண்கள் முதல் சிறுநீரகம் வரை இரவு தூக்கம் தொலைப்பதால் கடுமையான பாதிப்பை அடைகின்றன. பின், பகலில் உறங்குவதால் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் வயிற்றுப்புண், செரிமானப் பிரச்சினை என உடல் பாதிப்புகள் வரிசைகட்டி வருகின்றன.
மேலும், நரம்புத்தளர்ச்சி, தோல் சுருக்கம், மனஅழுத்தம் தொடங்கி எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக்குறைவு, கல்லீரல் பிரச்சினை என நோய்க்கு மேல் நோய் பெருகி வாழ்வை ஒரு வழியாக்கிவிடும்.
நாம் இரவைத் திருடினால், அது நம் ஆரோக்கியத்தைத் திருடுவிடும் என்பதை உணர்ந்து நடப்போம்.