தூர்வாரி வெளியே எடுத்துபோடப்பட்ட கால்வாய் கழிவுகள் அகற்றப்படாததால் வியாபாரிகள் பாதிப்பு
திருக்கனூர் கடைவீதி சாக்கடை கால்வாய் கழிவுகள் தூர்வாரப்பட்ட வெளியே எடுத்து கொட்டப்பட்ட நிலையில் அவை அகற்றப்படாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருக்கனூர்,
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் கடை வீதி புதுவை–தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கடைவீதியின் ஒரு புறம் புதுச்சேரி மாநிலப் பகுதியாகவும், மற்றொருபுறம் தமிழகத்தை சேர்ந்ததாகவும் உள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வகையிலும் தண்ணீர் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருக்கனூர் கடைவீதியின் தமிழக பகுதியில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. கடந்த ஒரு சில தினங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் சாக்கடை கால்வாய்களில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், பாலிதீன் பைகள் மற்றும் மண் அடைப்புகள் ஆகியவை அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. அவ்வாறு தூர்வாரப்பட்ட கழிவுகள் சாக்கடைக்கால்வாயையொட்டி ரோடு ஓரமாக ஆங்காங்கே குவியல் குவியலாக வைக்கப்பட்டன.
ஆனால் அந்த கழிவுகள் அங்கிருந்து அகற்றப்படாமல் அங்கேயே உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் காரணமாக அந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகளும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தமிழக பகுதியில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு அடைப்புகள் நீக்கப்பட்டாலும், கடைவீதியின் மறுபுறம் புதுவை பகுதியில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்த கால்வாயையும் தூர்வாரி சத்தம் செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது.