விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை சரத்பவார் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தினார்.
கோலாப்பூர்,
கோலாப்பூர் மாவட்டம் ஹத்கனங்கலே தாலுகா உபாரி கிராமத்தில் உள்ள ஜவகர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வெள்ளி விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார். வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், கோலாப்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் மந்திரிகளும் பங்கேற்றனர். அப்போது, சரத்பவார் பேசியதாவது:–மராட்டியத்தில் விவசாய விளைபொருட்களின் உள்ளீட்டு செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். விவசாயிகளின் வளர்ச்சிக்காக அரசும், கூட்டுறவு துறையும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்தது. இதன் பலனாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்தது. பருத்தி, கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதியில் 2–ம் இடம் பிடித்தது.இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.