திருவள்ளூர் மாவட்டத்தில் 73 நீர்தேக்கங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 73 நீர்தேக்கங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தொலைபேசி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை விழிப்புடன் கண்காணித்து வருவாய்த்துறை அலுவலர்களான வருவாய் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் மொத்தம் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு 1,500 அரசு அலுவலர்கள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறார்கள்.
மாவட்டத்தில் 1,266 நீர் தேக்கங்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் 73 நீர் தேக்கங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 144 நீர் தேக்கங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.