ஏரல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

ஏரல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. வங்கியின் இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் நகைகள்–பணம் தப்பியது.

Update: 2017-11-03 22:30 GMT

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலாளராக பணியாற்றுபவர் சுப்பையா. கடந்த 1–ந் தேதி பணிகள் முடிவடைந்ததும் மாலையில் வழக்கம்போல் சுப்பையா, வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள், கூட்டுறவு வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் வங்கியின் இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். இதனால் அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள்–பணம் தப்பியது.

நேற்று முன்தினம் காலையில் சுப்பையா வங்கிக்கு சென்றபோது வங்கியின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்ததையும், இரும்பு லாக்கர் சேதப்படுத்தப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாயஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்