நாடு முழுவதும் உள்ள சில்லரை வணிகத்தை அழிக்கும் கடைசி முயற்சியே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

நாடு முழுவதும் உள்ள சில்லரை வணிகத்தை அழிக்கும் கடைசி முயற்சியே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்று திருப்பூரில் தா.வெள்ளையன் பேசினார்.

Update: 2017-11-03 23:00 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் தா.வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நாடு முழுவதும் சில்லரை விற்பனை நசிந்து வருகிறது. சில்லரை வியாபாரத்தை முழுவதும் ரத்து செய்து விட்டு வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய மத்திய அரசு அனுமதித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சியே தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு. கிராமங்கள் வரை இணையதள வசதியை மத்திய அரசு கொண்டு வந்ததும் ஆன்லைன் வர்த்தகத்தை அதிகப்படுத்தவே.

ஒரே நாடு, ஒரே வரி என்பது பிரதமரின் வார்த்தை ஜாலம் மட்டுமே. அதனால் எந்த பயனும் இல்லை. ஒரே வரிவிதிப்பால் ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறுகின்றன. சில்லரை வணிகத்தை அழிக்கும் கடைசி முயற்சியே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அமெரிக்கா போன்ற பெரும் முதலாளி நாடுகளின் கைகூலிகளாக இருக்கவே இந்திய அரசின் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள்.

நாமது நாட்டில் வியாபாரம் செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு உள்ள மூலப்பொருட்களை எடுத்து நமக்கே விற்பனை செய்கின்றனர். மேலும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் நமது சில்லரை வியாபாரத்தை காப்பாற்ற ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை முறியடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்திற்கு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களை வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் புறக்கணிக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்