பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி மங்களூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம்,
மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை நம்பி, விவசாயிகள் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டில் வறட்சி ஏற்பட்டதால் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, வரகு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளுக்கு அதற்கான காப்பீடு திட்டத்தினை அறிவித்தனர். தொடர்ந்து பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு காப்பீடு திட்டத்திற்கான தொகையை விவசாயிகள், வங்கியில் செலுத்தினர்.
ஆனால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கடும் வறட்சி காரணமாக கருகி போனதால் காப்பீடு தொகையை கேட்டு வேளாண் அதிகாரிகள் மற்றும் காப்பீடு நிறுவன நிறுவனத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி 3–ந்தேதி மங்களூரில் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், நிர்வாகிகள் பழமலை, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று காலையில் மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், காப்பீடு தொகை வழங்காவிட்டால் மாவட்ட தலைநகர் கடலூரிலும், மாநில தலைநகர் சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தொழுதூர் செல்வமணி, சிறுபாக்கம் மணிகண்டன், அடரி காமராஜ், கொளவாய் வேல்முருகன், பெருமுளை ராகுல்காந்தி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.