தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின: விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி வழக்கு

தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்கக்கோரிய வழக்கு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிவகங்கை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-03 22:15 GMT

மதுரை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த உருவாட்டி கிராமத்தை சேர்ந்த வி.ஆர்.தமிழரசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உருவாட்டி வருவாய் கிராமத்தில் உள்ள 357 எக்டர் நிலங்களுக்கு 2016–17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்யப்பட்டது. சருகனி, காளையார்கோவில் பிர்காவில் ஒரே காலகட்டத்தில் மழை பெய்ததால் ஒரே நேரத்தில் உழவு நடந்தது. ஒரே சமயத்தில் நெல் விதைப்பு, களை எடுப்பு மற்றும் உரமிடுதல் போன்ற வேலைகள் நடந்தன.

அதன்பின் மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகிவிட்டன. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக உருவாட்டியை சுற்றி உள்ள எம்.மணக்குடி, பொன்னார்கோட்டை, கொடிக்குளம், மூவர் கண்மாய், மரக்காத்தூர் உள்ளிட்ட சில வருவாய் கிராமங்களுக்கு உரிய பயிர் இன்சூரன்ஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் உருவாட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் உரிய ஆய்வு செய்யாமல் மிக குறைவான சதவீத இன்சூரன்ஸ் தொகை ஒதுக்கி, வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது நியாயமற்றது. எங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று 7.8.2017 அன்று சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மற்ற வருவாய் கிராம விவசாயிகளுக்கு வழங்கியதை போல எங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மற்ற வருவாய் கிராமங்களுக்கு வழங்கியதை போல உருவாட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகையை வழங்குவது குறித்து மனுதாரர் அளித்த மனுவை பரிசீலித்து 6 வாரத்தில் உரிய நடவடிக்கையை கலெக்டர் எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்