பள்ளிக்கரணையில் சாலைகளை வெட்டி, மழைநீரை வெளியேற்றுகிறார்கள்

பள்ளிக்கரணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் சாலைகளை வெட்டி தற்காலிக கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Update: 2017-11-03 01:04 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீரை மாநகராட்சி அதிகாரிகள் மதகுகள் வழியாக வெளியேற்றினார்கள்.

ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழிஇன்றி ஏரி அருகே உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், மகாத்மா காந்தி நகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜேஷ் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை சூழ்ந்தது.

இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். சில வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தேங்கி நிற்கும் தண்ணீரை கைவேலிக்கு அனுப்ப கல்வெட்டுகளில் இருந்த அடைப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் வீடுகளை சூழ்ந்து நின்ற தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கியது.

நேற்று காலை அந்த பகுதியில் தேங்கி நின்ற தண்ணீர் ஓரளவு வடிந்து விட்டதால் பள்ளிக்கரணை பகுதிகளில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும் காந்தி நகர் 2-வது தெரு, ராம்நகர் தெற்கு விரிவு ஆகிய பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது.

எனவே சாலைகளை வெட்டி தற்காலிக கால்வாய்கள் அமைத்து தேங்கி நிற்கும் மழைநீரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வேளச்சேரி டான்சி நகரில் உள்ள தெருக்களில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இந்த பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளில் இருந்த அடைப்புகள் அகற்றப்படாததால் மழைநீர் தேங்கி இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து அந்த கல்வெட்டுகளில் உள்ள அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்