போலி ஆவணம் கொடுத்து நிதி நிறுவனத்தில் ரூ.1.42 கோடி மோசடி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது

சேலம் அருகே போலி ஆவணம் கொடுத்து நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த ஊழியர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-02 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சேலம் 3 ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரை சேர்ந்த கலியமூர்த்தி (35) என்பவர் உள்பட 8 பேர் எங்களுடைய நிறுவனத்தில் போலி பதிவு சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டு நகல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து 14 லாரிகளுக்கு ரூ.1 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றனர்.

கர்நாடக பதிவு எண்

லாரிகளில் உள்ள என்ஜின் எண், சேசிஸ் எண் ஆகியவற்றை அழித்து பதிவு சான்றிதழ்களில் உள்ள எண்களுடன் ஒத்துபோகுமாறு செய்து உள்ளனர். இதில் கலியமூர்த்தி கர்நாடக பதிவு எண் கொண்ட 2 லாரிகளுக்கு ரூ.19 லட்சம் கடன் பெற்றுள்ளார். பின்னர் நடத்திய விசாரணையில் தான் கலியமூர்த்தி உள்பட 8 பேரும் போலியான ஆவணம் கொடுத்து ரூ.1 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

10 பேர் கைது

இதில் நிதி நிறுவனத்தில் இருந்து கலியமூர்த்தி, நடுவலூரை சேர்ந்த காங்கமுத்து(36), ஆத்தூரை சேர்ந்த ராயப்பன்(38), வெங்கடேசன்(43), அ.தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணி செயலாளரான சுரேஷ்(44), ரகுநாதன்(51) உள்பட 8 பேர் ரூ.1 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடிக்கு உடந்தையாக அந்த நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் பிரபாகரன்(32), ராஜீவ்காந்தி(34), ஜெயவேல்(33), பாலாஜி(30) ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து கலியமூர்த்தி, காங்கமுத்து, ராயப்பன், வெங்கடேசன், சுரேஷ், ரகுநாதன், பிரபாகரன், ராஜீவ்காந்தி, ஜெயவேல், பாலாஜி ஆகிய 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்