நடைபாதை வியாபாரிகள் விவகாரம்: முதல்–மந்திரி பட்னாவிசுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு

நடைபாதை வியாபாரிகள் விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு நடத்தினார்.

Update: 2017-11-02 22:30 GMT

மும்பை,

நடைபாதை வியாபாரிகள் விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு நடத்தினார்.

நடைபாதை வியாபாரிகள்

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த ஆயுத பூஜை தினத்தன்று ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ரெயில் நிலைய நடைமேம்பாலத்தை ஆக்கிரமித்து, நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருவதால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாக மராட்டிய நவநிர்மாண் சேனா குற்றம்சாட்டியது.

மேலும், ரெயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வந்த நடைபாதை வியாபாரிகளை அக்கட்சியினர் அடித்து விரட்டினர். அதே வேளையில், நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் களம் இறங்கியதால், அக்கட்சியினருக்கும், நவநிர்மாண் சேனாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பட்னாவிஸ்– ராஜ் தாக்கரே

பரபரப்பான இந்த சூழலில், நேற்று மும்பையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சந்தித்தார். அப்போது, நடைபாதை வியாபாரிகள் பிரச்சினையில், உடனடி தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து நவநிர்மாண் சேனா நிர்வாகி பால நந்தகாவோங்கர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தினால், நடைபாதை வியாபாரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் கைவிடுவோம்’’ என்றார்.

ஐகோர்ட்டு உத்தரவு

மும்பையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபாதை வியாபாரிகள் கடை விரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஐகோர்ட்டு, நடைபாதைகளிலும், ரெயில் நிலைய நடைமேம்பாலங்களிலும், ரெயில் நிலையத்தின் 150 மீட்டர் சுற்றளவிலும் வியாபாரம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்