பேரணியாக செல்ல முயன்றபோது தடுத்த போலீசாருடன், பா.ஜனதாவினர் கடும் வாக்குவாதம்

பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-02 21:15 GMT
மைசூரு,

பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

கர்நாடக மாநில பா.ஜனதா சார்பில் ‘மாற்றத்திற்கான பயணம்’ எனும் பிரசார பயணம் நேற்று பெங்களூருவில் தொடங்கியது. இதற்கான விழாவில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மைசூருவில் இருந்து ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர். முன்னதாக இதற்கு அவர்கள் போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் தடையை மீறி நேற்று பா.ஜனதா தொண்டர்கள் மைசூரு டவுன் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக பெங்களூருவுக்கு புறப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சென்று அவர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், கூச்சல்-குழப்பமும் ஏற்பட்டது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

இதையடுத்து போலீசார் பா.ஜனதாவினர் மீது போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்ததாகவும், தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக வந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

இருப்பினும் அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களை தடுத்து நிறுத்துவதற்காகவும் மைசூரு-பெங்களூரு சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் பா.ஜனதாவினர் அனைவரும் மாற்றுப்பாதையில் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நேற்று மைசூருவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்