லாரி மோதி 5 மின்கம்பங்கள் உடைந்தன

பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் லாரி மோதி 5 மின்கம்பங்கள் உடைந்தன. இதனால் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Update: 2017-11-02 22:45 GMT
அணைக்கட்டு,

வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை மிகவும் குறுகலானது. இந்த குறுகிய சாலையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளதால் சாலையின் ஓரம் ஏராளமான மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தத்தில் இருந்து சரக்கு லாரி ஒன்று பள்ளிகொண்டா சாலையில் சென்றது. சாவடி பகுதியில் உள்ள நகர்புற வங்கி அருகே லாரி வந்தபோது சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது லாரி மோதியது. லாரி மோதியதில், அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.

இதனையடுத்து லாரி டிரைவர், லாரியை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். மின்கம்பங்கள் உடைந்து சேதமானதால் அந்த பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனையடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் இளநிலை மின்பொறியாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்