தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்க 138 படகுகள் தயார் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்காக 138 படகுகள், 50 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-11-02 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்காக 138 படகுகள், 50 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரும், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யுமான சஞ்சய்குமார் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பை தவிர்ப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:–

நிவாரண முகாம்

வடகிழக்கு பருவமழையின்போது, வெள்ளம் சூழும் பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்கள், தங்குமிடங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தங்கும் இடங்கள் மற்றும் முகாம்கள் அனைத்தும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வரும் நீர்வரத்து கால்வாய்களை வெள்ளநீர் எவ்வித தடங்கலும் இன்றி செல்ல அனைத்தும் தூர்வாரப்பட்டு உள்ளது. சிறுபாலங்கள் மற்றும் கட்டிடங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன. 427 குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 154 மதகுகள் மற்றும் மடைகள் சரிசெய்யப்பட்டு உள்ளன.

138 படகுகள்

வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க, 138 படகுகளும், 50 நீச்சல் பயிற்சி பெற்றவர்களும் நிவாரண முகாம்களுக்கு அருகில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பேரிடரின் போது அதிகம் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வெள்ளத்தடுப்பு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 2 குழுக்கள் மாநகராட்சி அளவிலும், 10 குழுக்கள் ஊராட்சி அளவிலும், 1 குழு பேரூராட்சி அளவிலும் நியமிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 10 அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர். வெள்ளம் அதிகம் ஏற்படும் இடங்களுக்கு தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 9 உணவு கிட்டங்கிகளிலும், ரே‌ஷன் கடைகளிலும், அங்கன்வாடி, சத்துணவு மையங்களிலும் தேவையான உணவு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 169 கிராமங்களில் உள்ள மக்களுக்கு தீயணைப்புத்துறையின் மூலம் வெள்ளக்காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

யார்–யார்?

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்