கலைகளின் கஜானா ‘பெட்ரா’

பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை.

Update: 2017-11-02 22:30 GMT
லையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரமாண்டம் தான், ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18–ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812–ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வெளி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் 1985–ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007–ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? என்கிறீர்களா.. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.

நெபாடியர்கள் தண்ணீரை பயன் படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில், நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல கால வெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், இன்னும் சில பிரமாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்கஸ்னே.

பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கி‌ஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது, உண்மையிலேயே இது கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருக்கிறது. என்றாலும், இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி, மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரமாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கி‌ஷங்கள், நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.

மேலும் செய்திகள்