நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார்– நவநிர்மாண் சேனாவினர் மோதல்

தாதரில் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார்– நவநிர்மாண் சேனாவினர் மோதிக் கொண்டனர்.

Update: 2017-11-01 21:25 GMT

மும்பை,

மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலைய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

இதன் பின்னர் ரெயில் நிலைய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ரெயில்வேயும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொண்டது.

அண்மையில் ரெயில் நிலைய பகுதிகளில் ஆக்கிரமித்து இருக்கும் நடைபாதை வியாபாரிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கையை நவநிர்மாண் சேனாவினர் மேற்கொண்டனர். நவநிர்மாண் சேனாவினரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

மேலும் அக்கட்சியினர் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக தாதர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், கலந்துகொண்ட காங்கிரசார், நவநிர்மாண் சேனாவினருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது திடீரென அங்கு நவநிர்மாண் சேனாவினர் திரண்டு, காங்கிரசாரை நோக்கி ஆக்ரோ‌ஷமாக கோ‌ஷங்கள் எழுப்பியபடி வந்தனர். இதனால் இருதரப்பினர் இடையேயும் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கடுமையாக தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனர். பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 2 கட்சியையும் சேர்ந்த 10–க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.

காங்கிரசார்– நவநிர்மாண் சேனாவினர் மோதிக்கொண்ட சம்பவம் தாதரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பரேலில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்ட நவநிர்மாண் சேனாவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து எறிந்தனர்.

மேலும் செய்திகள்