ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் 2 மாதமாக முடக்கம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வாணியம்பாடி ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி 2 மாதமாகியும் முடங்கி கிடப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-11-01 22:30 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி ரெயில்நிலையம் அருகே நியூடவுனில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் நான்கு வழிச்சாலைக்கு செல்வதற்கும் வசதி இருந்தது. ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க இங்கு சுரங்கப்பாதை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது சாலையில் வாகனங்கள் செல்வதை தடை செய்யும் விதமாக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் விறுவிறுப்படையும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முதல்நாள் தோண்டிய பணியோடு முடிந்து விட்டது. 2 மாதமாகியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை.

இதனிடையே ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால் 5 கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. டவுன் பஸ்களில் இதனால் கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டது. ரூ.6 ஆக இருந்த பஸ்கட்டணம் ரூ.10 ஆகவும் ரூ.8 ஆக இருந்த கட்டணம் ரூ.12 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பலர் சுற்றிச்செல்வதை தடுக்க குறுக்குப்பாதையில் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்கின்றனர். மேலும் நான்குவழிச்சாலையில் உள்ள அணுகுசாலையில் ஒரே பாதையில் இருவழித்தடத்திலும் பஸ்கள் செல்கின்றன. இதுபோன்ற நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் மட்டும் ரெயிலில் அடிபட்டும், வாகன விபத்திலும் 5 பேர் இறந்து விட்டனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

எனவே இந்த நிலையை தடுக்க சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அல்லது பணிகள் தொடங்கும் வரை ரெயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதே பகுதியில் சற்று தொலைவில் வளையாம்பட்டு என்ற இடத்தில் கட்டப்படும் ரெயில்வே மேம்பாலமும் பணிகள் முடியாமல் முடங்கியுள்ளது. அந்த பணிகளையும் விரைந்து முடிக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் கேள்வியாக உள்ளது.

மேலும் செய்திகள்