சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்

பெண்ணாடம் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-01 23:00 GMT

விருத்தாசலம்,

பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணாநகர் தெருவில் உள்ள மண் சாலை மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதில் தார் சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் இந்த மண் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அருகில் உள்ள விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து சேறும் சகதியுமான மண் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் உள்ள இந்த மண் சாலையில் தார் சாலை அமைக்க கூறி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இங்கு விரைந்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்