பல தலைமுறைகளை கடந்தும் புற்களால் வேயப்பட்ட குடிசையில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரிக்கை

பல தலைமுறைகளை கடந்தும் முன்டக்குன்னுவில் புற்களால் வேயப்பட்ட குடிசையில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-11-01 22:30 GMT

கூடலூர்,

கூடலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் அருகே முன்டக்குன்னு ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 22 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட குடோனில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த காலனி உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ஆதிவாசி மக்கள், மவுண்டாடன் செட்டி சமூக மக்கள் நடந்து பாண்டியாறு குடோனுக்கு வருகின்றனர்.

பின்னர் அங்கிருந்து கூடலூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் சுமார் 1½ கி.மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலத்தில் சேறும் சகதியாக காட்சி அளிக்கும் பாதையில் ஆதிவாசி மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையை காண முடிகிறது.

இதேபோல் இதுவரை அப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட வில்லை. இதனால் பல தலைமுறைகளை கடந்தும் புற்கள் வேய்ந்த மண் குடிசைகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள குடிசைகள் வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் மழை மற்றும் பனிக்காலத்தில் தங்களது குழந்தைகளுடன் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சில நேரங்களில் குடிசைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் வசிக்க குடிசைகள் இன்றி தங்களது உறவினர்கள் குடிசைகளில் பல குடும்பங்களாக சேர்ந்து வசித்து வருகின்றனர்.

இதுதவிர மின்சாரம், குடிநீர், சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஆதிவாசி மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் என நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே தார் சாலை, வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது அதுவும் சரிவர எரியவில்லை என ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் நெல்லியாளம் நகராட்சி மூலம் குடிநீர் கிணறு மற்றும் மின்மோட்டார் அறையும் கட்டப்பட்டது. ஆனால் மின்சார இணைப்பு வழங்கப்பட வில்லை. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மின்வாரிய துறையினர் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முக்கிய பிரச்சினையான தொகுப்பு வீடுகள் கட்டுவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என ஆதிவாசி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:–

எங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து முன்டக்குன்னுவில் வசித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட வில்லை. இதனால் புற்கள் வேய்ந்த மண் குடிசைகளில் பல குடும்பங்களாக குடியிருந்து வருகிறோம். தொகுப்பு வீடுகள், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சூரிய சக்தியில் இயங்கும் மின்சாதனங்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அவை சரிவர பராமரிக்காததால் தற்போது எரிவதில்லை. எனவே அதிகாரிகள் எங்களுக்கு தொகுப்பு வீடுகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை சந்தித்து எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

மண் குடிசைகளில் வாழ்வதால் இரவு நேரத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறோம். இதனால் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தோளில் சுமந்து கொண்டு சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாண்டியாறு குடோனுக்கு சென்று அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் எங்களுக்கு தொகுப்பு வீடுகள், சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்