அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு

மதுரை கே.கே.நகரில் தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக்கழக(இ.எஸ்.ஐ.) அலுவலகம் உள்ளது.

Update: 2017-11-01 23:15 GMT

மதுரை,

மதுரை கே.கே.நகரில் தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக்கழக(இ.எஸ்.ஐ.) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மண்டல இணை இயக்குனராக நெல்லையை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 40) பணியாற்றி வந்தார். இ.எஸ்.ஐ. பணம் செலுத்தும் நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்டதாக தினேஷ்குமார் மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவரை சி.பி.ஐ. போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி பணியாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத தொகையை குறைக்க வேண்டும் என்றால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கல்லூரி தரப்பினரிடம் அதிகாரி தினேஷ்குமார் கேட்டுள்ளார்.

அதன்பேரில் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி சார்பில் இடைத்தரகர் ராஜமோகன் என்பவர் நேற்றுமுன்தினம் இ.எஸ்.ஐ. அலுவலகம் வந்தார். அங்கு அவர் பணத்தை தினேஷ்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த சி.பி.ஐ. போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நேற்று மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 14–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்