கந்து வட்டி தொடர்பாக செல்போனில் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

கந்து வட்டி தொடர்பாக செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

Update: 2017-10-31 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிக்கப்படுவதை தடை செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003-ன் கீழ் அரசு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்திற்கு அதிகமாக கந்து வட்டி வசூல் செய்வது குற்றமாகும். கந்து வட்டி வசூல் செய்வது தொடர்பாக புகார் மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விரைந்து விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்து வட்டி வசூல் தொடர்பாக பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 04324-256508 என்ற தொலைபேசி எண்ணிற்கும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் 94981 10765 என்ற செல்போன் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் தங்களது அலுவலகத்திற்கு கந்து வட்டி வசூல் தொடர்பாக வரும் புகார்களை உடன் போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு அதன் அறிக்கை அனுப்பிட வேண்டும். கந்து வட்டி வசூல் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களில் தங்களது உயிரை மாய்த்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கந்து வட்டி வசூல் செய்வது தொடர்பான புகார் மனுக்கள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பதிவேட்டில் பதியப்பட்டு, அம்மனுக்கள் உடன் நடவடிக்கைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. மேற்காணும் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவப்பிரியா, உதவி கலெக்டர்கள் சரவணமூர்த்தி, விமல்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன், கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணி அலுவலர் அப்துல்பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்