பாய்லர் ஆலை பயிற்சி மையம் முன்பு தமிழ் தேசிய பேரியக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தமிழ் தேசிய பேரியக்கத்தினர் பாய்லர் ஆலை பயிற்சி மையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-31 23:00 GMT
திருவெறும்பூர்,

தமிழகத்தில் திருவெறும்பூர், ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பாய்லர் ஆலையில் கடந்த பல ஆண்டுகளாக புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர் களுக்கு உரிய கல்வி தகுதி இருந்தும், பாய்லர் ஆலை பயிற்சி மையத்தில் பயிற்றுனராக சேர்ந்து சான்றிதழ் பெற்றவர்களால் பணியில் சேர முடியவில்லை.

மற்ற மாநிலங்களில் அந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசு, தனியார் துறை, மாநில அரசு துறைகளில் 90 சதவீதம் அளவுக்கு வேலை வழங்க ஆணைகள் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய ஆணை இல்லாததால் வெளி மாநிலத்தவர்கள் வேலையில் அதிக சதவீத இடங்களை பெற்று விடுகின்றனர்.

இத்தகைய அரசின் போக்கை கண்டித்து திருச்சி திருவெறும்பூர் பாய்லர் ஆலை பயிற்சி மையம் முன்பு தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வைகறை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கவித்துவன் முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் குலபால்ராஜ், மேரி, ராசு, ஒருங்கிணைப்பாளர் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும், 90 சதவீத வேலை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு துறையில் 100 சதவீதம் வழங்க வேண்டும். தமிழ் குடிமக்கள் என்று போலியாக சான்றிதழ் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 128 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்