ஸ்கூட்டியில் சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி நர்சிங் மாணவி பலி

வாணியம்பாடி அருகே ஸ்கூட்டி மீது பள்ளிக் கூட வேன் மோதியதில் நர்சிங் மாணவி பலியானார். அவரது தோழி மற்றும் என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-10-31 23:15 GMT
வாணியம்பாடி,

ஜோலார்பேட்டை அருகே உள்ள பக்கிரிதக்கா கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் மகள் நித்யா (வயது 21). இதே பகுதியை சேர்ந்த பெரியமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் காயத்ரி (18). இருவரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளாவர். நேற்று காலை இவர்கள் இருவரும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது என்ஜினீயரிங் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரான அவர்களது நண்பர் பூங்குளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) ஸ்கூட்டி வாகனத்தில் வந்தார்.

அவர் இருவரையும் நர்சிங் கல்லூரியில் கொண்டுபோய் விடுவதாக கூறினார். இதனையடுத்து மாணவிகள் இருவரும் அவரது வாகனத்தில் ஏறிக்கொண்டனர்.

பின்னர் மாணவிகளுடன் சந்தோஷ்குமார் வாகனத்தை ஓட்டிச்சென்றார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளிக்கூட வேன் இவர்களது ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்து துடித்தனர். இதில் நித்யா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சந்தோஷ்குமாரும், காயத்ரியும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்தோஷ்குமார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட வேனை ஓட்டி வந்த டிரைவர் மதீன்(35) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்