அனைத்து வாய்க்கால்களுக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 14 பேர் கைது
அனைத்து வாய்க்கால்களுக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்தை தொடர்ந்து, புன்செய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலைபோல் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர்.
இந்தநிலையில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம், மக்கள் மன்ற தலைவர் செல்லப்பன் மற்றும் விவசாயிகள் பலர் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை திரண்டனர்.
அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது சங்க தலைவர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழக அரசின் உத்தரவுபடி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்கு கடந்த 5–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைத்து வாய்க்கால்களிலும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் பழைய ஆயக்கட்டு பாசனங்களான தடப்பள்ளி–அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படவில்லை. இதேபோல் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக உயிர்நீர்கூட திறக்கப்படவில்லை. எனவே அந்த பாசனத்திற்கும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.