கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து மழைநீரை திருப்பி விட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் முற்றுகை

கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து அதில் குடியிருப்பு பகுதியில் தேங்கி இருந்த மழைநீரை அதிகாரிகள் திருப்பி விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Update: 2017-10-31 23:30 GMT

பூந்தமல்லி,

அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட முகப்பேர், ஜெ.ஜெ நகர், மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை மழை கொட்டி தீர்த்தது. மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலைகளில் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் உள்ள டி.டி.பி காலனியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சூழ்ந்தது. இதனால் மிகுந்த அவதி அடைந்த பொதுமக்கள் மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஜே.சி.பி எந்திரம் மூலம் கொரட்டூர் ஏரிக்கரையின் ஒரு பகுதியை உடைத்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை ஏரிக்குள் திருப்பி விடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

ஏரிக்குள் மழைநீரை விடக்கூடாது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு இது முழுக்க, முழுக்க மழைநீர் தான். கழிவுநீர் இல்லை என்பதை உறுதி செய்தபிறகுதான் ஏரியில் விடுவதாகவும், இந்த பணிகள் முடிந்த பிறகு உடைக்கப்பட்ட ஏரிக்கரை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் சமூக ஆர்வலர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழைநீர் கொரட்டூர் ஏரிக்குள் திருப்பி விடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்