கொடுங்கையூரில் நடந்த கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலையாளி கைது

கொடுங்கையூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலையாளியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 4 கொலை வழக்கு உள்ளது.

Update: 2017-11-01 00:00 GMT
பெரம்பூர்,

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தண்டையார்பேட்டையை சேர்ந்த குமார் என்பவரை 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான காஞ்சீபுரம் மாவட்டம் சூனம்பேட்டையை சேர்ந்த ராகேஷ் என்ற ராக்கி (வயது19) என்பவரை கொடுங்கையூர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கொலையாளியை பிடிக்க புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஷியாமளாதேவி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோருக்கு கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராகேஷ் கொடுங்கையூர் பகுதியில் நண்பர்களுடன் சுற்றி வருவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த ராகேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கைதான கொலையாளி ராகேஷ் மீது வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் போலீஸ் நிலையங்களில் தலா 2 கொலை வழக்குள் உள்பட மொத்தம் 4 கொலை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்