பா.ஜனதா ஆட்சிக்கு வர பாடுபட்டவர்கள் அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள்
‘‘பா.ஜனதா ஆட்சிக்கு வர பாடுபட்டவர்கள் அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று ஏக்நாத் கட்சே வேதனை தெரிவித்தார்.
மும்பை,
பாரதீய ஜனதா தலைமையிலான மராட்டிய அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், துலேயில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கலந்து கொண்டு பேசினார்.அவர் கூறுகையில், ‘‘கட்சிக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து, பா.ஜனதா ஆட்சிக்கு வர கடுமையாக பாடுபட்டவர்கள், இன்றைக்கு அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாராயண் ரானே போன்றவர்கள் ஆட்சியில் இடம்பெறுகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்தார்.
65 வயதான ஏக்நாத் கட்சே, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில் 2–வது இடத்தில், அதாவது வருவாய்த்துறை மந்திரியாக பதவி வகித்தார். இந்த நிலையில், நில முறைகேடு புகார் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மீது நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.