பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் தாணிப்பூண்டி ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். விவசாயி. இவரது மனைவி மலர் (வயது 46). இவர்களுக்கு நந்தினி (24) என்ற மகளும், நரேஷ் (22) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது உறவினர் வீட்டு திருமணம் பாகல்மேடு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ராமன் தனது மோட்டார்சைக்கிளில் மனைவி மலரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் சென்றார். பெரியபாளையத்தை அடுத்த எர்ணாகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சாலையில் மாடுகள் சண்டை போட்டுக்கொண்டு நின்றன. அந்த மாடுகளின் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மலர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.