தொழிலாளியை கொன்று பணத்தை பறித்த வழக்கில் பார் ஊழியருக்கு ஆயுள் தண்டனை
அவினாசி அருகே தொழிலாளியை கொன்று பணத்தை பறித்த வழக்கில் பார் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருவண்ணாமலை மாவட்டம் துருஞ்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(வயது 40). சுமைதூக்கும் தொழிலாளி. இவரும், இவருடைய நண்பரான செந்தில்குமார்(39) என்பவரும் கடந்த 30–11–2015 அன்று திருவண்ணாமலையில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை குனியமுத்தூருக்கு ஒரு லாரியில் சென்றனர். பின்னர் அங்கு பொருட்களை அவர்கள் இறக்கினார்கள்.
அதன்பிறகு அன்று இரவு கோவையில் இருந்து பஸ் மூலமாக 2 பேரும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் கண்டக்டருடன் தகராறு ஏற்படவே திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் வந்ததும் பஸ்சில் இருந்து விஜயன், செந்தில்குமார் ஆகியோர் இறக்கி விடப்பட்டனர். இதைத்தொடர்ந்து விஜயன், செந்தில்குமார் 2 பேரும் தெக்கலூர் அருகே நாதம்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு சென்று மது குடித்துள்ளனர். அந்த நேரத்தில் அந்த பாரில் ஊழியராக வேலை செய்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயக்குமார்(35) என்பவர் விஜயனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் விஜயன், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து ஜெயக்குமாரை சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட கோபம் அடைந்த ஜெயக்குமார் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். மேலும் 2 பேரிடம் இருந்து ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை ஜெயக்குமார் பறித்துக்கொண்டு தப்பினார். இந்த சம்பவத்தில் தலை உடைந்து விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். இதுதொடர்பாக அவினாசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கொலை முயற்சி குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், செல்போன், பணம் பறித்த குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் ஜெயக்குமார் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி முகமது ஜியாபுதீன் தீர்ப்பு கூறினார். அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் முருகேசன் ஆஜராகி வாதாடினார்.